Wednesday 22 July 2015

தமிழ் ஸ்டுடியோவின் 'லெனின் விருது-2015' பெறுகிறார் பி.கே.நாயர்!

சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களை கொண்டாடவும், திரைப்பட வளர்ச்சியில் பங்கெடுப்பதைப் போற்றவும்  2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லெனின் விருது, இந்த ஆண்டு (2015)  திரைப்பட ஆவணக் காப்பகத்தை தோற்றுவித்த  பி.கே. நாயர் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது என தமிழ் ஸ்டுடியோ இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த அறிக்கையில்...


யார் பி.கே. நாயர்?

பரமேஸ் கிருஷ்ணன் நாயர் (பி.கே.நாயர்) 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். இளமைப்பருவத்தில்தான் அவருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் மேலோங்கியிருக்கிறது. குறிப்பாக 1940களில் வெளியான, படங்களான, கே.சுப்ரமணியத்தின், ”அனந்தசயனம்”, ”பக்தபிரகலாதா”படங்களைச் சொல்லலாம். ஆனாலும், இவரது சினிமாவின் ஆசைக்கு குடும்பத்திலிருந்து போதிய ஆதரவுகள் கிடைக்கவில்லை.

பின்னர் 1953ல் கேரளப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவுடன், தனது திரைப்பட ஆசையைத் தொடர பம்பாய்க்குச் சென்றுவிட்டார். பம்பாயில் படப்பிடிப்பு நுணுக்கங்களையும், சினிமா எடுக்கும் முறையையையும், அப்போது பிரபலமாகயிருந்தவர்களான, மெஹபூப் கான், பிமல் ராய், ஹிரிஷ்கேஷ் முகர்ஜி போன்றோரிடம் பயிலும் வேளையிலேயே, திரைப்படத் துறையில் பிறரைப் போல சாதிக்க தனக்கு இன்னும் தகுதிகள் வேண்டுமென்றும், திரைப்படக் கல்வித் துறை சார்ந்து தான் செயல்பட்டால் தன் எதிர்காலம் நன்றாகயிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டார்.

1961ஆம் ஆண்டு, பூனே திரைப்படக் கல்லூரியில் உதவி ஆய்வாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கு பேராசிரியர்களாக இருந்த மரியா செடோன், மற்றும் சதீஸ் பகதூர் ஆகியோருடன் இணைந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு “சினிமா ரசனை” வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். பின்னர்., 1964லிலிருந்து இந்திய தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தின் (NFAI) நிறுவனர் மற்றும் இயக்குனராகவும் இருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய திரைப்படங்களை, அர்ப்பணிப்போடு NFAIக்கு கொண்டுவந்திருக்கிறார்.

பல முக்கியத் திரைப்படங்கள் பி.கே.நாயர் அவர்களின் பெருமுயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் சில: தாதா சாகேப் பால்கேயின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ மற்றும் காலிய மர்தன், எஸ்.எஸ்.வாசனின் ‘சந்திர லேகா’, உதய் சங்கரின் ‘கல்பனா’, ”மார்த்தாண்ட வர்மா”, பாம்பே டாக்கிஸின் படங்களான ”ஜீவன் நையா”, ”பந்தன்”, ”கங்கன்”, ”அச்சுத் கன்யா”, மற்றும் ”கிஸ்மத்” முதலானவை அடங்கும்.

பி.கே.நாயரின் வாழ்க்கையைக் குறித்து ஆவணப்படம் ஒன்றும் “செல்லுலாய்ட் மேன்” என்ற பெயரில் சிவேந்திரா சிங் துங்கர்பூர் என்பவரால் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் பல விருதுகளையும் வென்றுள்ளது.

ஏன் பி.கே. நாயருக்கு?

தமிழில் திரைப்படம் சார்ந்த பல்வேறு மாயைகளை உடைக்கவும், திரைப்படம் சார்ந்த பல்வேறு உட்கூறுகளை பரவலாக அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் பணியை தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து செய்து வருகிறது. சினிமா என்பதே வெறுமனே சினிமா அல்ல. அது பல்வேறு கலைகளின் தொகுப்பு. பல நுண்கலைகளும், தொழில்நுட்பமும் ஒன்று சங்கமிக்கும் இடம். ஒரு கேமராவை வைத்துக்கொண்டு சில கதாப்பாத்திரங்களை நடிக்க வைத்து அதனை பதிவு செய்து, திரையரங்கில் திரையிட்டு மக்கள் பார்த்தால் அதுதான் திரைப்படம் என்கிற தவறான கண்ணோட்டமே தமிழ் சினிமா வரலாற்றில் விரவிக் கிடக்கிறது. ஆனால் சினிமாவின் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்தும், அதன் வரலாறு, அழகியல், அரசியல் சார்ந்த புரிதல் பெரும்பாலும் திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்கே இருப்பதில்லை. அத்தகைய நிலையை துடைத்தெறிய லெனின் விருது அவசியமாகிறது.

தமிழில் நல்ல சினிமா உருவாவதற்கான பல்வேறு வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சுயாதீனத் திரைப்படக் கலைஞர்கள் படமெடுத்தால் அந்த படத்தை யார் பார்ப்பது, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் எப்படி கிடைக்கும்? திரையரங்க வெளியீடுகளில் மற்ற திரைப்பட கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், பொருளாதாரமும் சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே முதலில் சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களை நாம் கொண்டாட வேண்டும். அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும்.

படமெடுப்பவர்களை போலவே, சினிமாவின் பின்னணியில் அதன் வளர்ச்சிக்காகவும், மக்களின் ரசனைக்காகவும் பாடுபடும் பலரையும் நாம் ஆதரிக்க, கொண்டாட வேண்டும். அப்போதுதான் சினிமா அதன் அடுத்தக் கட்ட வளர்ச்சியை எட்டும். பி.கே. நாயர் தன்னுடைய அயராத பணியினால் இந்தியாவில் பெரும்பாலான திரைப்படங்களை மீட்டெடுத்தார். தொடர்புடைய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இல்லாத அக்கறை பி.கே. நாயருக்கு இருந்தது. திரைப்படங்களை அதன் பிரதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்கிற தீராத ஆசையும், அதற்கான ஓயாத உழைப்பையும், எதிர்பாராத பல்வேறு சிக்கலையும் பி.கே நாயர் சந்தித்தார். ஆனாலும், தன்னுடைய பணியில் தொய்வடையாது, தொடந்து பல்வேறு மொழிகளில் வெளிவந்த பல ஆயிரக்கணக்கான திரைப்படங்களை மீட்டெடுக்கும் பணியை செவ்வனே செய்து முடித்தார். திரைப்பட ரசனையை வளர்க்கும் விதமாக பல்வேறு நாடுகளுடன் போட்டிபோட்டு நல்ல சினிமா ரசனை வகுப்பை முன்னெடுத்தார். ரசனை மாற்றம், திரைப்பட வளர்ச்சி ஆகிய இரண்டு துறையிலும் பி.கே. நாயரின் பணி அளப்பரியது.

அவரது இந்த பணியை போற்றும் விதமாக தமிழ் ஸ்டுடியோ இயக்கம் 2015 ஆம் ஆண்டுக்கான லெனின் விருதை அவருக்கு அளித்து தன்னை பெருமைப்படுத்திக் கொள்கிறது. ஒரு மாபெரும் ஆளுமையை கொண்டாடும் இந்த தருணத்தை பெற்றமைக்காக தமிழ் ஸ்டுடியோ பெரும் கவுரமாக கருதுகிறது.

விருது வழங்கும் விழா சென்னையில் எதிவரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக பி.கே. நாயர் பற்றிய ஆவணப்படமான செல்லுலாயிட் மேன் தமிழ்நாடு முழுக்க திரையிடப்படவிருக்கிறது. விருது வழங்கும் நாளன்று சென்னையிலும் இந்த திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது.

படத்தொகுப்பாளர் ’பீ. லெனின்’ பெயரில் விருது ஏன்?

படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவர்கள் தமிழில் யதார்த்த சினிமாக்களின் வருகைக்கும், சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடி. வணிக நோக்கத்தை பிரதானமாகக் கொண்ட வெகுஜனப் படங்களில் ஆரம்பகாலத்தில் வேலை செய்திருக்கிறார். மறுப்பதற்கில்லை. ஆனால், இதே காலக்கட்டத்தில் மலையாளத்தில் பரதன் உள்ளிட்ட முக்கியமான இயக்குனர்களுடன் வேலை செய்கிறார். இந்தியாவின் முக்கியமான திரைப்படங்களை தன்னுடைய படத்தொகுப்பு பாணியால் செரிவூட்டுகிறார். படத்தொகுப்பின் மூலம் கதையை சொல்லும் புதிய உத்தியை அறிமுகம் செய்கிறார். மேலும், வெகுஜன சினிமாக்களின் எண்ணிக்கை அதிக அளவில் வரத்துவங்கியபொழுது, தேவையில்லாத பாட்டுகள், வன்முறை, ஆபாசங்கள் என சினிமாவின் கமர்ஷியல் தனங்கள் எல்லையைத் தாண்டுகிறது. அச்சமயத்தில் இனிமேலும் இதுபோன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்யமாட்டேன் என்று, அவராகவே தமிழ் சினிமா சிக்கிக்கொண்டிருக்கின்ற சூழலிருந்து படிப்படியாக வெளியே வந்தவர்.

அப்பொழுது, லெனின் படத்தொகுப்பு செய்தாராயின் படம் தேறிவிடும், என அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரையே நாடி வந்துகொண்டிருந்த காலம். லெனின் சினிமாவில் அனைவருக்கும் தேவையானவராக இருந்தார், அவரின் படத்தொகுப்பிற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடவும் தயாரிப்பாளர்கள் தயாராகவே இருந்தனர். லெனின் பணத்தின்மீது நாட்டம் கொள்ளவில்லை, நல்ல சினிமாக்களின் மீது காதல் கொண்டிருந்தார்.

தமிழ்ச்சினிமாவின் குறுகிய எல்லையிலிருந்து வெளியே வந்தவுடன், குறும்படங்களிலும், சமரசமற்ற யதார்த்த திரைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்புடன் ஈடுபட்டார். தனக்கான பார்வையை உறுதிசெய்து ஸ்திரப்படுத்திக்கொண்டார். தான் நினைத்தபடியே சுதந்திரமாக படங்களும் எடுக்க ஆரம்பித்தார். லெனின், 1992ல் இயக்கிய ‘நாக் அவுட்’ என்ற குறும்படம்தான், முதன்முதலில் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் அல்லாத ஒருவர், தமிழகத்தில் எடுத்த குறும்படம், என்ற சிறப்பு பெறுகிறது. அதுவரை பிலிம் இன்ஸ்டியூட் படிப்பவர்கள், திரைப்படத்திற்கான பரிசோதனை முயற்சியாக மட்டுமே சில குறும்படங்கள் எடுத்து வந்தனர். அவைகள் வெளியுலக பார்வைக்கும் அதிகமாக காண்பிக்கப்பட மாட்டாது. அதனையல்லாமல், ‘நாக் அவுட்’ பரவலான கவன ஈர்ப்பையும் பெற்று அதைப்போன்று பல குறும்படங்கள் வருவதற்கும், குறும்படங்கள் பற்றிய புரிதல் அனைவருக்கும் தெரிவதற்கும் காரணமாக அமைந்தது. தமிழ் குறும்படங்களுக்கு படத்தொகுப்பாளர் லெனின் தான் முன்னோடி.

இதுமட்டுமின்றி, “நாக் – அவுட்’டிற்கு முன்பு வரையிலும், தேசிய விருதானது குறும்படங்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால், லெனினின் ‘நாக் அவுட்’ முதன்முதலாக தேசிய விருது பெற்ற குறும்படம். முழுநீளப் படங்கள் மட்டுமே தேர்வுப்பட்டியலில் இருந்ததை போராடி மாற்றி, குறும்படங்களுக்கும் தேசிய விருதிற்கான அங்கீகாரம் கிடைக்கச்செய்வதில் லெனின் தீவிரம் காட்டினார். குறும்படங்களும் மதிக்கப்பட்டு, விருது வழங்கப்பட வேண்டும் என்ற தன் நியாயத்தை முன்னிலைப்படுத்தினார். அவர் மூலமாகவே தேசிய விருதில் குறும்படங்களுக்கும் தனியான கெளரவம் கிடைக்கின்றது. அன்றிலிருந்து இன்றுவரை குறும்படங்களுக்கு தனித்த அங்கீகாரமும், அவர்களுக்கென்று தேசிய விருதில் ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இன்று வரையிலும் அது தொடர்கின்றது. இதற்குக்காரணமும் லெனின் அவர்களே.

பின்னர் ’ஊருக்கு நூறு பேர்’, ’செடியும் சிறுமியும்’, ’எத்தனை கோணம் எத்தனை பார்வை’, போன்ற பல படங்கள் எடுத்திருக்கிறார். இவை எவையுமே திரையரங்க வெளியீட்டிற்காக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்ல. திரையரங்க வெளியீடு இல்லாமலேயே தான் இயக்கிய படங்களை ஊரெங்கும் கொண்டு செல்ல முடியும் என்பதற்கும், திரையரங்குகள் மறுத்தாலும் அப்படத்திற்கு விருதுகள் கிடைக்கப்பெறும், என பரவலான சமூகத்திற்கு உணர்த்த தானே முன்னோடியாக விளங்கினார்.

கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவெனில், இது வரையிலும் எடுக்கப்பட்ட படங்கள் திரையரங்க வெளியீட்டினை மட்டுமே சிரமேற்கொண்டு எடுக்கப்பட்ட படங்களாக இருக்கின்றன. திரையரங்கத்தில் வெளியாகவில்லையெனில் அதனை ஒரு படமாக கூட யாரும் பொருட்படுத்துவதில்லை. இத்தகைய கட்டுப்பாடுகளையெல்லாம் லெனின் அவர்களே முதலாவதாக கலைகிறார். அண்டை மாநிலமான கேரளாவில் தொலைக்காட்சி உரிமைக்காக மட்டுமே படம் எடுக்கின்றனர். அந்த உரிமையின் மூலம் கிடைக்கின்ற பணத்தில் அவர்கள் பொருளாதாரத்தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

மேலும், தமிழ்நாட்டு மக்கள் திரையரங்குகளில் படம் பார்த்தே பழக்கப்பட்டவர்கள். ஆனால், லெனினின் ’நாக் அவுட்’, த.மு.எ.க.ச மூலமாக ஊர், ஊராக திரையிடப்படுகிறது. திரையரங்கத்தின் வாயிலாக மட்டுமில்லாமல், திரையிடலின் வாயிலாகவும், தன் படத்தினை எந்த ஊர் மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிரூபித்தவர் படத்தொகுப்பாளர் லெனின். இவ்வாறான சூழ்நிலையில் சுயாதீனத்திரைப்படங்கள் எடுத்திருக்கின்றவர்களுக்கு விருது கொடுக்கின்றோம் என்றால், படத்தொகுப்பாளர் பீ. லெனினைத் தவிர இவ்விருதின் பெயருக்கு பொருத்தமானவர்கள் வேறுயாரும் கிடையாது. தமிழகத்தில் திரைப்படங்களை இயக்கமாக மாற்றி மக்களிடம் கொண்டுசேர்த்ததும் லெனின்தான். படம் எடுப்பதோடு நின்றுவிடாமல், அதனை மக்களிடம் கொண்டுசேர்ப்பிப்பதும் உண்மையான கலைஞன் என்பனின் கடமை என்பதை நன்கு உணர்ந்து செயலாற்றுபவர்.

எனவேதான் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயராலேயே, அவரின் பிறந்த தினமான ஆகஸ்டு 15ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படுகின்றது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress Priya Anand new stills








உயிர்ப்பலி தீர்வாகாது என பொட்டிலடிக்கச் சொல்லும் படம் 'தற்காப்பு'!


"KINETOSCOPE"  "க்னைடோஸ்கோப்"  சார்பாக  DR.S. செல்வமுத்து & N. மஞ்சுநாத் இணைந்து தயாரிக்க, P. பழனி & B.முருகேசன் இணை தயாரிப்பில், R.P.ரவி இயக்கத்தில்  உருவாகி  வரும் படம் 'தற்காப்பு'.

இயக்குனர் பி .வாசுவின் மகன் சக்திவேல் வாசு இதில் கதாநாயகனாக நடிகின்றார். சக்தி  தனது பெயரை  சக்திவேல் வாசு என்று மாற்றிக்கொண்டுள்ளார். .  மற்றொரு நாயகனாக இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கின்றார்.

 கதை கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் நமது எல்லையில் அமைந்துள்ள கர்நாடகாவின் பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

மனித உயிர்களின் மேன்மையை சொல்லும் அம்சம்கொண்ட கதை இது. தவறுதலாக நடைபெறும் ஒரு கொலையால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக சொல்லும் திரைக்கதையால் உருவாக்கியுள்ளோம்.

தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல உண்மை சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்காப்பு என்பது தன்னை மட்டும் காத்துக்கொள்ளுவதைப் பற்றி பேசாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே பேசும்.

மிகவும் புதுமையான கதைக்களம். காரணம் எதுவானாலும் உயிர்ப்பலி தீர்வாகாது என்ற உயரிய நோக்கத்தை வலியுறுத்துகிறது 'தற்காப்பு'.  F.S. பைசல் இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு செய்கிறார் ஜோன்ஸ் ஆனந்த். ஷான் லோகேஷ் எடிட்டிங்கையும்,  , கலையை M.G.முருகன்-ம் கவனிக்கின்றனர்.

இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது. அடுத்தமாதம் வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நடிகர்கள் / தொழில்நுட்ப கலைஞர்கள் 

 THARKAPPU"    "தற்காப்பு "

ARTISTE :   சக்திவேல் வாசு  , சமுத்திரக்கனி, ரியாஸ்கான் மற்றும் பலர்

BANNER  :  "KINETOSCOPE"  "க்னைடோஸ்கோப்"

PRODUCERS  : DR.S. செல்வமுத்து & N. மஞ்சுநாத்

 CO-PRODUCERS  : P. பழனி & B.முருகேசன்

Sunday 12 July 2015

சேற்றில் மாட்டிக்கொண்ட ஸ்ருஷ்டி!

இரா.சரவணன் இயக்கத்தில் நரேன் - ஸ்ருஷ்டி நடிக்கும் படம் 'கத்துக்குட்டி'. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. அப்போது வயலில் நாற்று நடுவதுபோல் ஸ்ருஷ்டிக்கு சீன் வைத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.


 மும்பையைச் சேர்ந்த ஸ்ருஷ்டிக்கு எப்படி சேற்றில் இறங்கி நாற்று நடத் தெரியும்? அதனால் ஸ்ருஷ்டி வயலில் இறங்காமல் தயங்கி இருக்கிறார். உடனே, துணைக்கு கிராமத்துப் பெண்கள் சிலரை வரவழைத்து அவர்கள் துணையுடன் ஸ்ருஷ்டியை வயலில் இறக்கி விட்டிருக்கிறார்கள். கிராமத்துப் பெண்கள் சொல்லிக் கொடுத்ததைப்போல் நாற்று நடும் காட்சியில் அசத்தலாக நடித்திருக்கிறார் ஸ்ருஷ்டி.


 இயக்குநர் 'டேக் ஓகே' சொல்ல, வயலில் இருந்து கிளம்பி வர வேண்டிய ஸ்ருஷ்டி அங்கேயே நின்றிருக்கிறார். அப்போதுதான் யூனிட்டுக்குப் புரிந்திருக்கிறது... ஸ்ருஷ்டியின் இரண்டு கால்களும் சேற்றில் மாட்டிக் கொண்டது. கால்களை வெளியே எடுக்க முடியாமல் ஸ்ருஷ்டி தத்தளிக்க, ஒருவழியாக கிராமத்தினரும் படக்குழுவினரும் வயலுக்குள் இறங்கி ஸ்ருஷ்டியை மீட்டிருக்கிறார்கள்.